The Temple Of Sri Vadapathrasayanar, Srivilliputhur, Tamilnadu

இக்கோவில் ஸ்ரீஆண்டாள் கோவில் கட்டுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உண்டாக்கப் பெற்றதாக கருதப்படுகிறது. இக்கோவிலில்தான் பெரியாழ்வார் இறைதொண்டு செய்து வந்தார். இக்கோவிலின் பெரியகோபுரமே தமிழ்நாட்டின் சின்னமாக உள்ளது. 196 அடி உயரம் கொண்ட இக்கோபுரம் பதினொன்று நிலைகளை கொண்டது. இக்கோபுரம் கி.பி(765-815) காலப்பகுதியில் பாண்டிய மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது.

இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் வடபத்ரசயனர் என்று அழைக்கப்படுகிறார். பாற்கடலின் ஆலிலை மீது இறைவன் பள்ளி கொண்டு காட்சி தருவதால் இப்பெயர் வந்தது.

இங்குள்ள சந்நிதியில் இரண்டு தளங்கள் உள்ளன. மேல் தளத்தில் உள்ள கருவறையில் வடபத்ரசயனர் ஐந்து தலைகள் உடைய ஆதிசேடனை படுக்கையாகக் கொண்டு ஸ்ரீதேவி, பூமாதேவி அருகிலிருக்க சயனத்திருக்கோலத்தில் கிழக்கு முகமாகக் காட்சி தருகிறார்.கீழ்தளத்தில் இலட்சுமி நரசிங்கப்பெருமாள் சந்நதி உள்ளது.

இக்கோவிலின் இராஜகோபுரத்தை மகாமேருவுக்கு இணையாகக் கம்பநாட்டாழ்வார் பாடிய பாடல் கோபுரக்கல்வெட்டில் உள்ளது.  இக்கோபுரத்தின் தென் பிராகாரத்தில் ஸ்ரீஆண்டாள் அவதரித்த நந்தவனம் உள்ளது.