காட்டழகர் கோவில்

(செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர்)

 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு திருமால் காட்டழகர் என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார்.

        காலையிலும், மாலையிலும் அரசுப்பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அடர்ந்த காடுகளிடையே சுமார் 5 கி.மீ நடந்து சென்றால் கோவில் மலை அடிவாரத்தை அடையலாம்.

        கோவில் அடிவாரத்தில் ‘நூபுர கங்கை’ எனப்படும் தீர்த்தம் உள்ளது. இது துர்வாச முனிவரால் சாபம் பெற்ற சுபதா முனிவர் சாப விமோசனம் பெற்ற இடமாகும்.

        மலை மீது ஏறிச்செல்ல 246 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சுந்தரராசப்பெருமாள் என்ற்ழைக்கப்படும் காட்டழகர், ஸ்ரீதேவி (சுந்தரவல்லி) மற்றும் பூமிதேவியருடன் (சௌந்தரவல்லி) நின்ற கோலத்தில் அருள் தருகிறார். அர்த்த மண்டபத்தில் துவார பாலகர், சுபதா முனிவர் (மண்டூக மகரிஷி), சக்கரத்தாழ்வார், சேனை முதல்வர், ஆதிவராகர், ஞானப்பிரான் ஆகியோரின் சிலைகள் உள்ளன.

        மகாமண்டபத்திற்கு வெளியே கருடாழ்வார் சந்நிதி இறைவனைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருடாழ்வாரின் தென்புறம் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருபசாமி, எமன், காலன், தூதன் ஆகியோரின் சிலைகள் உள்ளன. இம்மண்டபத்தின் தூண்கள் அழகிய வேலைப்பாடுடன் அமைக்கப்பட்டுள்ளன.

        தமிழ் வருடப் பிறப்பு நாள் மற்றும் ஒவ்வொறு சனிகிழமையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் பெருமளவு பக்தர்கள் அழகரை தரிசிக்கின்றனர்.