Sri Andal Temple, Srivilliputhur, Tamilnadu

சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய முகப்பை உடைய பந்தல் மண்டபம் வரவேற்கிறது. இம்மண்டபத்தின் இருபுறமும் அமைந்துள்ள கடைகளுடன் வானமலை ஜீயர் மடம், வேதாந்த தேசிகர் சன்னதி, மணவாள மாமுனி சன்னதி ஆகியவை உள்ளன.

பந்தல் மண்டபத்தை அடுத்து உள்ளது திருக்கல்யாண மண்டபம். யாளி சிலைகளுடன் கூடிய பெரிய தூண்களுடன் அழகுற காட்சியளிக்கின்றது. நுழைவாயிலின் தென்புறத்தில் உள்ள தூணில் அப்பர் சிலை உள்ளது. மண்டபத்தின் விதானத்தில் நாயக்கர் கால இராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சரியான பராமரிப்பு இல்லாமையால் இவ்வோவியங்கள் அழிந்து வருகின்றன.

திருக்கல்யாண மண்டபத்தைத் தாண்டினால் நாம் காண்பது கொடிமர மண்டபமாகும். இங்குள்ள தூண்களில் இராமன், இலக்குவன், அர்ச்சுனன், கர்ணன், இரதிதேவி, மன்மதன், குகன், கலைமகள், வீரபத்திரர், சக்தி, வேணுகோபாலன், விசுவகர்மா, ருத்ரகணிகை, ஜலந்தரன், மோகினி ஆகியோரின் சிலைகள் மிக அழகுடன் காட்சியளிக்கின்றன. வடக்குப்பிரகாரத்தில் பழைய ஏகாதசி மண்டபம்,  கண்ணாடி மண்டபம், தைல அறை, உபரி மடப்பள்ளி, பரமபத வாசல் ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் தென்புறம் மரத்தாலான மண்டபமும், அதில் சுதை வேலைப்பாடுடன் கூடிய கஜலட்சுமி சிலையும் உள்ளன. அருகே ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இச்சுற்றின் தென்மேற்கு மூலையில் இராமர், சீதை, இலக்குவன் ஆகியோருடைய பஞ்சலோகத்தால் ஆன சிலைகள் உள்ளன. வடமேற்கு மூலையில் ஸ்ரீநிவாசன், சுந்தரராஜன் சந்நதிகள் உள்ளன. உள் சுற்றில் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட இலட்சுமி நாராயணரைக்காணலாம். இதன் அருகே ஆண்டாளின் திருப்பாவையில் சொல்லப்பட்டுள்ள மாதவிப்பந்தல் உள்ளது. பிரகாரச்சுவர்களில் 108 வைணவத்தலங்களும் அழகிய ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டப நுழைவாயில் இரு துவார பாலகர்களின் சிலைகள் உள்ளன. மகாமண்டபத்தில் வெள்ளிக்கிழமை குறடு எனப்படும் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் சொக்கப்ப நாயக்கர் தத்தம் மனைவியரோடு காணப்படும் சிலைகள் உள்ளன.

கருவறையில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் தங்க சிம்மாசனத்தில் காட்சியளிக்கின்றனர். கருடாழ்வார் சமமாக சுவாமியுடன் இருக்கும் காட்சியை இத்திருத்தலத்தில் மட்டுமே காணலாம்.