ஸ்ரீவில்லிபுத்தூர் வரலாறு (History of Srivilliputhur)

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியிருந்த பகுதிகள் மல்லி என்ற அரசியின் ஆட்சியின் கீழ் இருந்தது. இவ்வரசிக்கு வில்லி மற்றும் கண்டண் என இரு புதல்வர்கள் இருந்தனர். இருவரும் வனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த போது கண்டணை புலி கொன்று விட,  அதை அறியாத வில்லி அவனைத் தேடி அலைந்து, களைத்து உறங்கிய சமயத்தில், இறைவன் கனவில் வந்து நடந்ததைக் கூறினார். மனம் தெளிந்த வில்லி இறைவனின் ஆணைப்படி அங்கு கோயில் எழுப்பி, காட்டைத் திருத்தி அழகிய நகரை உண்டாக்கினான். இதனாலே இவ்வூர் வில்லிபுத்தூர் எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஆண்டாள் அவதரித்த காரணத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் எனச் சிறப்பு பெற்றது.

 

திருமலை நாயக்கர்(1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள்(1689-1706) ஆட்சி காலத்தில் இவ்வூர் சிறப்புடன் விளங்கியது. திருமலை நாயக்கர் இவ்வூர்க்கோயில்களில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். இவ்வூர் 1751 முதல் 1756 வரை நெற்கட்டுச்சேவல் ஜமீன்தார் பூலித்தேவர் ஆளுகையிலும், பின்பு முகம்மது யூசுப்கான் கீழும் இருந்தது. பிறகு 1850 வரை ஸ்ரீஆண்டாள் கோயில் திருவாங்கூர் மன்னரின் பொறுப்பில் இருந்தது. பின்பு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தது.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இவ்வூர் 1838ல் திருநெல்வேலி மாவட்டத்திலும், 1910ல் இராமநாதபுரம் மாவட்டத்திலும் இணைக்கப்பட்டிருந்தது. பிறகு மேற்கு இராமநாதபுரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு இராமநாதபுரம் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது முதல், ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.