ஸ்ரீவைத்தியநாதசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்

Vaidyanathaswamy temple, Srivilliputhur

 

இக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  இராசபாளையம் செல்லும் சாலையில் உள்ள மடவார் வளாகம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீவைத்தியநாதசுவாமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இக்கோவிலின் இராசகோபுரம் 9 நிலைகளுடன், 134 அடி உயரம் கொண்டது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களின் முதல் நாள் அன்று, கதிரவனின் கதிர், கருவறையில் படும்படி இக்கோவில் கட்டப்பட்டுள்ளது ஒரு சிறப்பம்சமாகும். இராசகோபுரத்தின் அருகில் சிவகெங்கை தீர்த்தம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் உள்ளது. கோவிலின் முன்புறத்தில் நடுவே மண்டபத்துடன் கூடிய மற்றொரு தெப்பக்குளம் ஒன்று உள்ளது.

 ஸ்ரீவைத்தியநாதர் இங்கு லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவைத்தியநாதர் சந்நதியின் வலப்புறத்தில் சிவகாமி அம்மனுக்கு கோவில் உள்ளது. கஜலட்சுமி, 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள், துர்காதேவி, சிவகாமி அம்மனுடன் கூடிய நடராசப்பெருமாள், பைரவர், சனீஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், விநாயகர், சரசுவதி, தட்சிணாமூர்த்தி ஆகியோர்க்கு தனித்தனி சந்நதிகள் உள்ளன. பிரதோச காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வைகாசி மாதம், பிரமோற்சவம் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும்.

தனது தீராத வயிற்று வலியை குணமாக்கியதிற்க்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக   மதுரை திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட நாடகசாலை மண்டபம் உள்ளது. நாயக்கர்கள் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களை இங்கு காணலாம். இத்திருத்தலம் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ந்த தலங்களில் ஒன்றாகும்.